Take a fresh look at your lifestyle.

தினமலர் அதிபர் மறைவு

153

தமிழர் வரலாற்றுத் தளத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும்!

தினமலர் நாளிதழின் அதிபரும் ஆசிரியருமான திரு.இரா.கிருஷ்னமூர்த்தி அவர்களின் மறைவு வேதனை அளிக்கிறது. அவர் இதழியல் துறையில் மட்டுமின்றி, தொல்லியல் துறையின் ஆராய்ச்சித் தளங்களிலும் தீவிரமான ஈடுபாடு கொண்டவர். குறிப்பாக, நாணயவியல் ஆராய்ச்சியில் போற்றுதலுக்குரிய பங்களிப்பைச் செய்தவர். இத்தகைய ஆராய்ச்சி பணிகளின் மூலம் தமிழினத்தின் புதைந்த- சிதைந்த வரலாற்றை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர். தமிழ்மொழி குறித்த அவரது ஆராய்ச்சியை அடிப்படையாக கொண்டுதான் தமிழக அரசு தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதி கோரியது குறிப்பிடதக்கதாகும்.


நாணயவியல் தொடர்பாக பல நூல்களைத் தமிழ்ச் சமூகத்திற்கு வழங்கியிருக்கிறார். இதழியல் துறையில் புதிய தொழில்நுட்பங்களை, குறிப்பாக கனிணி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திச் சாதணை படைத்தவர். இவரது பணிகளை பாராட்டி இந்தியஅரசு குடியரசு தலைவரின் தொல்காப்பியர் விருதினை வழங்கி சிறப்பித்துள்ளது. “சங்ககாலச் சோழர் நாணயங்கள்” என்னும நூலுக்காக தமிழக அரசு இவருக்கு விருது வழங்கிப் பாராட்டியுள்ளது.


தமிழர் வரலாற்றுத் தளத்தில் முத்திரை பதிக்கத்தக்க பல சாதனைகளைப் படைத்த திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மறைவு, நாணயவியல் உள்ளிட்ட தமிழர் வரலாற்று ஆராய்ச்சித் தளத்திற்கு நேர்ந்த மாபெரும் இழப்பாகும்.


அவரை இழந்து வாடும் குடும்பத்தார் உள்ளிட்ட யாவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.


இவண்:
தொல்.திருமாவளவன்,
நிறுவனர்-தலைவர், விசிக.

தேதி : 05.03.2021

Leave A Reply

Your email address will not be published.